
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு,
தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது. எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்.
அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைபாட்டை தலைமை செயலாளர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.