search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடியில் 29-ந்தேதி ஆய்வு

    வருகிற 30-ந்தேதி நடைபெறும் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
    மதுரை:

    பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இந்த விழா 3 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

    28-ந்தேதி தேவரின் ஆன்மீக விழா, 29-ந்தேதி அரசியல் விழா போன்றவையும், 30-ந்தேதி குருபூஜையும் நடைபெறும். அரசியல் கட்சி தலைவர்கள் குருபூஜை நாளில் பசும்பொன் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நாளை (28-ந் தேதி) ஆன்மீக விழாவோடு, தொடங்குகிறது.

    வருகிற 30-ந்தேதி நடைபெறும் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    இதற்காக அவர் 29-ந் தேதி பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வருகிறார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    அதன் பிறகு மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகழாய்வு நடைபெறும் கீழடிக்கு சென்று அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால தமிழர்களின் நாகரீகத்தை பார்வையிடுகிறார்.

    கீழடியில் 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை 7 கட்டங்களாக அகழாய் வுபணி நடந்துள்ளது.

    இதே போல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

    கீழடியில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனையும் அவர் ஆய்வு செய்கிறார்.

    மு.க.ஸ்டாலின் கீழடி வருவதை முன்னிட்டு அங்கு மாவட்ட நிர்வாகமும், தொல்பொருள் துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

    கீழடி ஆய்வை முடித்து விட்டு மு.க.ஸ்டாலின் மதுரை திரும்புகிறார். இரவில் சுற்றுலா மாளிகையில் அவர் தங்குகிறார்.

    மறுநாள் காலை (30-ந் தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் தெப்பக்குளத் தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து காரில் பசும்பொன் புறப்பட்டுச் செல்கிறார்.

    பகல் 11 மணிக்கு பசும்பொன் சென்றடையும் மு.க.ஸ்டாலின் அங்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் அவர் கார் மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணத்தை முன்னிட்டு 3 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.


    Next Story
    ×