search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வினீத்திடம்  அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மனு கொடுத்த காட்சி.
    X
    கலெக்டர் வினீத்திடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மனு கொடுத்த காட்சி.

    திருப்பூர் மாநகர் பகுதியில் குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் - கலெக்டரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மனு

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை விரைந்து முடித்து மாணவர்கள் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.
    திருப்பூர்:

    11 கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரை வினீத்தை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார் .

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் தெற்கு தொகுதியில் அம்மா இரு சக்கர வாகனம் மானிய தொகை வழங்குவதற்கு 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 538 பயனாளிகளுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் 126 பயனாளிகளுக்கான மானியத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. 

    மீதமுள்ள 339 பயனாளிகளுக்கான மானிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மீதமுள்ள பயனாளிகளுக்கும் மானியத் தொகையை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் குடிசை மாற்று வீட்டுக்கான பயனாளிகளின் பட்டியலை கடந்த ஆட்சி காலத்தில் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இன்று ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் மீண்டும் வீடு வாங்கி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். 

    மேலும் குடிசை மாற்று வீடுகளுக்கு கட்ட வேண்டிய தொகையான ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை சென்னை மாநகராட்சி பகுதியில் அ.தி.மு.க. அரசு வழங்கியது போல் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    அவ்வாறு செய்ய முடியாவிட்டால் கட்ட வேண்டிய தொகையை நீண்ட கால தவணை முறையில் செலுத்த ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

    பொதுமக்கள் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே கடந்த கால ஆட்சியில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது போல் தற்போதும் குடிநீர் சீரான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    மேலும் நான்காவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை விரைந்து முடித்து மாணவர்கள் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்.

    திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் முதியோர்களுக்கு அவர்களுடைய கைரேகை பதிவு இல்லை. எனவே அவர்களுக்கு மாதாந்திர பொருட்களை எந்த தடையுமின்றி வழங்க வேண்டும்.

    முதலிபாளையம் ஊராட்சி மற்றும் நாச்சிபாளையம் ஊராட்சி பகுதிகளில் இடங்களை  முறையான அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே விரைவாக அளவீடு செய்து பயனாளிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் கலெக்டரிடம் வழங்கினார் . 

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சியின்போது பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், கண்ணன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், ஆண்டவர் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர். 
    Next Story
    ×