search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கற்கள் எடுக்க தடையால் தொழில் முடக்கம் - ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

    கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பல தலைமுறையாக கற்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காக ஊத்துக்குளி ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    பின்னர் அவர்கள் திருப்பூர் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்திற்குட்பட்ட கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெத்தம்பாளையம்,வெள்ளியம்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, மொரட்டுப்பாளையம், திம்மநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், சேடர்பாளையம் ஆகியபகுதிகளில் சுமார் 4500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த மக்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி பூண்டுக்கல் மற்றும் கிரைண்டர்கல் ஆகியவற்றை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றோம். இது ஒரு குடிசை தொழிலாகும்.

    கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பல தலைமுறையாக வாழையடி வாழையாய் கற்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலுக்கு தேவையான கற்கள் வெட்டி எடுக்கும் கனிமங்களை தற்காலிகமாக தடை செய்து உள்ளனர்.

    இந்த தொழிலில் வெடிமருந்து பயன்படுத்தி பாறைகளை தகர்க்கிற முறை கையாளப்படுவதில்லை. பாறைக் குழியில் தண்ணீர் ஊற்றி, ட்ரீல்லிங் செய்தும் கைகளால் உடைத்தும் கற்களை வடிவமைத்து எடுப்பதால் காற்றை மாசுபடுத்தும் புகையும் வருவதில்லை. 

    இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முறையோ காற்றை மாசுபடுத்தும் புகையோ இல்லைஎன்பதால் எந்தவித சுகாதார பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    நாங்கள் அனைவரும் 5 சென்ட் முதல் 50 சென்ட் வரையிலான பட்டாநிலத்தில் தான் இந்த தொழிலை செய்து அனைவரும் பயன்பெற்று வருகிறோம். நாங்கள் அரசிடம் லைசென்ஸ் பெற முடிவதில்லை. 2 .50ஏக்கர் அளவில் தொழில் செய்தால் தான் லைன்சஸ் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. 

    நாங்கள் ஏற்கனவே பலமுறை வாய்மொழி மூலமாகவே உரிய வரைமுறை படுத்தி தருமாறு கேட்டுள்ளோம். எனவே இந்த தொழிலின் தன்மை மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல் சுற்றுச்சுழலுக்கும் ஆபத்து விளைவிப்பது இல்லை என்பதை தொழில் அனுபவம் 100 சதவீதம் உறுதிப்படுத்துகிறது.

    அதனால் எங்களை தொழில் செய்ய அனுமதிக்கின்ற முறையில் மாவட்ட நிர்வாகம், மாநில அரசுக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் உரிய விளக்கம் அளித்து உயர்நீதிமன்றத் தடையிலிருந்து இத்தகைய தொழிலுக்கு மட்டும் விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    எங்களது பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கற்களால் தான் கோவையில் கிரைண்டர் தொழில் இயங்கி வருகிறது. இதில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

    உயர்நீதிமன்றத் தடையால் எவ்வித ஆபத்தும் இல்லாமல் குடிசைத் தொழிலாக செய்து வருகிற இத்தொழில் முடக்கப்பட்டுவிட்டதால் 40,000 தொழிலாளர்கள் வேலையிழந்து பாதித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணத்தாலும் தொழில் முடங்கியுள்ளது.

    கடந்த 5 மாதங்களாக தொழில் செய்ய இயலாததால் வரும் பண்டிககளை எங்கள் குடும்பங்கள் கொண்டாட இயலாத காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து எங்களுக்கு நிவாரணம் வழங்கிட வழிவகை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    எனவே, தாங்கள் போர்க்கால வேகத்தில் செயல்பட்டு பரிதவிக்கும் குடிசைத்தொழிலையும் தொழிலாளர்களையும் காப்பாற்றுமாறு பணிவோடு வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×