search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை

    கடந்த ஒரு வாரமாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மழைக் காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதைத் தொடர்ந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு கரும்பு, தென்னை, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் அமராவதி அணை விளங்குகிறது.

    இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை நெருங்கும் சூழல் உள்ளது. 

    அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்இருப்பு 85 அடியை கடந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். 

    அதன் பின்பும் நீர்வரத்து குறையவில்லை என்றால் அணையில் உள்ள 9 கண்மதகுகள், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகின்ற ஷட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் மூலமாக உபரிநீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். தற்போதைய நிலவரப்படி 81.17 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.    
    Next Story
    ×