search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பனியன் தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா - சொந்த ஊர் செல்ல 350 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

    பனியன் தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.
    திருப்பூர்:

    திருப்பூரில் உள்நாட்டு பனியன் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். 

    தீபாவளி பண்டிகையையொட்டி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நிட்டிங், டையிங், ரைசிங், பிரண்டிங், எம்ப்ராய்டரி, எலாஸ்டிக், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

    இந்தநிலையில் பனியன் தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளிக்கு 10 நாட்களே இருப்பதால் தொழிலாளர்களுக்கு வாரச்சம்பளத்துடன் சேர்த்து போனஸ் பட்டுவாடா வழங்கப்பட்டு வருகிறது. பெரிய பின்னலாடை நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா தொடங்கியுள்ளது.

    பெரும்பாலான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் போனஸ் செலுத்தப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்கள்தொழிலாளர்களுக்கு நேரடியாக போனஸ் தொகையை வழங்குகிறார்கள். வருகிற 30-ந் தேதியுடன் போனஸ் பட்டுவாடாவை முடிக்க பனியன் நிறுவன உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

    முன்கூட்டியே போனஸ் வழங்கினால் தான் தொழிலாளர்கள் ஜவுளி எடுப்பது, வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்குவது போன்றவற்றில் ஈடுபட முடியும் என்பதால் போனஸ் பட்டுவாடா தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவுக்கு பிறகு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பின்னலாடை உற்பத்தி ஆர்டர்கள் அதிகம் வரத்தொடங்கியுள்ளது. 

    குறித்தகாலத்துக்குள் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். வருகிற நவம்பர் மாதம் 2-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறைஅளிக்கப்பட உள்ளது. பண்டிகை முடிந்து ஒருவாரத்துக்குள் மீண்டும் ஆடை தயாரிப்பு பணி தொடங்க உள்ளதாகவும், அதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூரிலேயே இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். 

    இதனிடையே தீபாவளியையொட்டி திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருப்பூர் போக்குவரத்து கழக மண்டலத்தின் கீழ் திருப்பூர் 1, திருப்பூர் 2, பழனி, தாராபுரம், காங்கயம், பல்லடம், உடுமலை ஆகிய பணிமனைகள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் 568 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவற்றுடன் சேர்த்து திருச்சி, சேலம், மதுரை, நாகர்கோவில், தேனி, கம்பம், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகங்கை, பட்டுகோட்டை, புதுக்கோட்டை, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக மதுரைக்கு 50 பஸ்களும், திருச்சிக்கு 40 பஸ்களும், சேலத்துக்கு 30 பஸ்களும் இயக்கப்படுகிறது. 

    பிற பகுதிகளுக்கு கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பஸ் இயக்கப்பட உள்ளது.சிறப்பு பஸ்கள் பஸ்  நிலையத்திற்கு வரும் நேரம், புறப்படும் நேரம், பயணிகளை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைப்பது, டவுன், சர்வீஸ், பிற கோட்ட பஸ்களை ஒருங்கிணைப்பதற்கு அதிகாரிகள், ஊழியர் அடங்கிய 15 குழுக்கள் அமைக்கப்படுகிறது. கோவில்வழி, புதிய பஸ் நிலையம், யுனிவர்சல் பஸ்  நிலையம் பகுதியில் தலா 5 குழு வீதம் 15 குழுக்கள் தயார் நிலையில் இருக்கும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், பஸ் இயக்க தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். முன்பதிவு செய்து பயணிக்க விரும்புவோர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையத்தை அணுகலாம். முன்கூட்டியே வருபவர்கள் தங்களுக்கான இருக்கைகளை உறுதி செய்து கொள்ளலாம். வழக்கமான பஸ்களில் உள்ள கட்டணமே சிறப்பு பஸ்களிலும் வசூலிக்கப்படும் என்றனர். 
    Next Story
    ×