search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
    X
    தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

    சென்னையில் இன்று தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்

    புரசைவாக்கம் பகுதியில் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமையான இன்று மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
    சென்னை:

    சென்னையில் தீபாவளி பொருட்கள் வாங்க இன்று மக்கள் கடை வீதிகளிலும், வணிக பகுதிகளிலும் அலை மோதினார்கள்.

    தி.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் பெரிய ஜவுளிக் கடைகளிலும், சாலையோர கடைகளிலும் தீபாவளி புத்தாடைகளை வாங்குவதற்கு பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கடைகளும், 500-க்கும் மேற்பட்ட பெரிய கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    இதன் காரணமாக எம்.சி. ரோடு பகுதியில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தீபாவளியையொட்டி சீட்டு நடத்துபவர்கள் மொத்தமாக சேலைகளை ஆர்டர் கொடுத்து இங்கிருந்து வாங்கி செல்வார்கள். அதுபோன்ற தீபாவளி சீட்டு போட்டிருந்தவர்களும் சேலை மற்றும் பொருட்களையும் வண்ணாரப்பேட்டையில் இருந்து வாங்கிச் சென்றனர்.

    ராயபுரம், ஜி.ஏ. ரோடு பகுதியில் துணிக்கடைகள், மளிகைக் கடைகள், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இங்கு தீபாவளியையொட்டி பலகாரம் செய்வதற்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கும் அதிகளவில் மக்கள் வந்திருந்தனர்.

    இதனால் ஜி.ஏ.ரோடு பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் ரோந்து சுற்றி வந்தனர்.

    ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் பகுதியிலும் தீபாவளியையொட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு திருவொற்றியூர், மணலி, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இதனால் அந்த பகுதியிலும் மக்கள் அதிகமாக காணப்பட்டனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் மக்கள் அலைமோதினார்கள். கொத்தவால்சாவடி பகுதியில் மளிகை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வதற்கு அதிக அளவில் மக்கள் திரண்டனர்.

    புரசைவாக்கம் பகுதியில் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமையான இன்று மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அங்குள்ள ஜவுளிக்கடைகள், தானா தெருவில் உள்ள பூக்கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றிலும் வியாபாரம் சூடுபிடித்திருந்தது.

    சென்னை மாநகர் முழுவதும் அனைத்து வணிக பகுதிகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக சென்னையில் வணிக பகுதிகள் இன்று களை கட்டி காணப்பட்டது.
    Next Story
    ×