search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் ஜவுளிகள்  வாங்க குவிந்த பொதுமக்கள்.
    X
    திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் ஜவுளிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

    தீபாவளி கூட்ட நெரிசல் - திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, பூட்டை உடைத்து திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என அனைவரின் விபரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
    திருப்பூர்:

    தீபாவளி நெருங்குவதால், பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் பொருட்டு பழைய குற்றவாளிகளின் பட்டியலை திருப்பூர் மாநகர போலீசார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக, போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் நடந்த கூட்டத்தில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு முன்னேற்பாடுகள், ஆலோசனைகளை வழங்கினார்.

    அதன்படி வடக்கு மற்றும் தெற்கு சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் குற்ற நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள், தலைமறைவாக உள்ளவர்கள், ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என தனித்தனியாக பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, பூட்டை உடைத்து திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என அனைவரின் விபரத்தையும் சேகரித்து வருகின்றனர். 

    ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே உள்ளவர்களை போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகள், ஜவுளி மற்றும் நகை கடைகள், பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாகன ரோந்து போலீசாரும், ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்து விடாமல் தொடர்ந்து வாகனங்களில் சென்றபடி கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் வந்து செல்லும் மக்களின் நகை, பணம் மற்றும் உடைமைகளை பாதுகாக்க எச்சரிக்கை விழிப்புணர்வு வாசகங்களுடன் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்களது உடைமைகளை கவனமாக வைத்திருந்து, விழிப்போடு இருக்க வேண்டும். தீபாவளி நெருங்கிவிட்டதால் வெளியூர் செல்லும் மக்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்து சென்றால் கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×