search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிய வகை சாம்பல் வாலாட்டி பறவையையும் நோட்டீஸ் ஒட்டி வரவேற்கும் பறவை ஆர்வலர்களையும் படத்தில் காணலாம்.
    X
    அரிய வகை சாம்பல் வாலாட்டி பறவையையும் நோட்டீஸ் ஒட்டி வரவேற்கும் பறவை ஆர்வலர்களையும் படத்தில் காணலாம்.

    சேலத்திற்கு வந்த அரிய வகை சாம்பல் வாலாட்டி பறவைகள் - நோட்டீசு ஒட்டி வரவேற்பு

    அரிய வகை சாம்பல் வாலாட்டி, மண்கொத்தி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வர தொடங்கி உள்ளன.
    சேலம்:

    நாடு விட்டு நாடு செல்ல மனிதர்களுக்கு ‘பாஸ்போர்ட்’, ‘விசா’ போன்ற ஆவணங்கள் தேவை என்றாலும், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகளுக்கு இதுபோன்ற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

    “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வாசகம் இந்த பறவை இனங்களுக்குத்தான் பொருந்தும். தனது உடல் சக்திக்கு ஏற்ப பறந்து, விரிந்த இந்த உலகில் பறவைகளால் திசை எட்டும் சுதந்திரமாக பறந்து திரிய முடியும்.

    இப்படி பறவை இனங்கள் காலங்காலமாக நாடு விட்டு நாடு செல்வது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுவது உண்டு. அதாவது, பூமியின் வட துருவத்தில் குளிர் காலம் தொடங்கும்போது, அங்குள்ள பறவை இனங்களுக்கு அதுபோன்ற சீதோஷ்ண நிலை பிடிப்பதில்லை. இதனால் தென் துருவம் நோக்கி அவை கிளம்பிவிடுகின்றன. அவ்வாறு வரும் பறவைகள் தான், இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் நாட்டிற்கு வருகை தருகின்றன.

    ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலம் வெளிநாட்டு பறவைகளின் காலமாகும். அதன்படி அரிய வகை சாம்பல் வாலாட்டி, மண்கொத்தி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வர தொடங்கி உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் காவிரி, வசிஷ்டநதி உள்ளிட்ட முக்கிய நதிகளும், முக்கனேரி, டேனீஸ்பேட்டை, கோட்டேரி, ஏற்காடு ஏரி என நிறைய நீர் நிலைகளும் உள்ளன.

    இதேபோல் பறவைகள் வசிப்பதற்கு உகந்த ஏற்காடு மலை, கஞ்சமலை, ஜம்பூத்து மலை, காடையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, மேட்டூர் வனப்பகுதிகள் என பல வனப் பகுதிகள் உள்ளன. சாம்பல் வாலாட்டி பறவைகள் இங்கு தங்கி இருந்து உணவுக்காக அருகில் உள்ள நீர்நிலைகள், வயல்வெளிகளுக்கு சென்று வருவது உண்டு. இவ்வாறு 6 மாத காலம் வெளிநாட்டு பறவைகள் தங்கிச் செல்வது வழக்கம். மார்ச் மாதம் இறுதியில் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்.

    இந்த நிலையில் சாம்பல் வாலாட்டி மற்றும் வெளிநாட்டு பறவைகளை வரவேற்கும் விதமாக ஜம்பூத்து மலையில் சேலம் பறவையியல் கழகம் சார்பில் ஆசிரியர் கலைச்செல்வன் மற்றும் மாணவர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட பறவை ஆர்வலர்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் தற்போது சாம்பல் வாலாட்டி பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இரை தேடி வரும் பறவை இனங்கள், விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சி, புழுக்களை சாப்பிட்டு, பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தங்களின் இருப்பிடங்களுக்கு செல்கின்றன.

    இந்த பறவை இனங்களை பொதுமக்கள் இடையூறு செய்யாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்க வேண்டி நோட்டீசு ஓட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.
    Next Story
    ×