search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திருட்டு - முதல்வரின் தனிப்பிரிவில் விவசாயிகள் புகார்

    சுல்தான்பேட்டை ஒன்றியம், மலைப்பாளையம் மற்றும் காட்டம்பட்டி பகுதிகளில் தென்னை நார் மஞ்சி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
    திருப்பூர்:

    பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து ஆண்டுக்கு 3.5 டி.எம்.சி., தண்ணீர் திருடப்பட்டு வருவதாக திருப்பூர் சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

    சுல்தான்பேட்டை ஒன்றியம், மலைப்பாளையம் மற்றும் காட்டம்பட்டி பகுதிகளில் தென்னை நார் மஞ்சி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் தென்னை நார் மஞ்சிகள் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்படுகின்றன. ஒரு கிலோ தென்னை நார் மஞ்சிகளை தயார்படுத்த 100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

    இதற்கான தண்ணீர் பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து முறைகேடாக எடுத்து பயன்படுத்தப்படுகிறது. பி.ஏ.பி., வாய்க்காலில் 46வது முதல் 56வது கி.மீ., வரை, வாய்க்காலை ஒட்டியுள்ள நிலங்களை விலைக்கு வாங்கி அப்பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பாசன நீரை சேகரித்து வைத்து 4-6 இன்ச் பைப் லைன் அமைத்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதனால் ஆண்டுக்கு 3.5 டி.எம்.சி., தண்ணீர் முறைகேடாக எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது திருமூர்த்தி அணையில் உள்ள தண்ணீரில் 20 சதவீதம். இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.இந்த தொழிற்சாலைகள் மூலம் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த தண்ணீர் நேரடியாக நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது.

    இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம், கால்நடை தொழில் அழியும் அபாயத்தில் உள்ளது. இந்நிறுவனங்களின் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும். முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள், மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    Next Story
    ×