search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கி கிடக்கும் காட்சி.
    X
    குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கி கிடக்கும் காட்சி.

    சேலம் மாவட்டத்தில் விடாமல் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

    சேலத்தில் கிச்சிப்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் அங்குள்ள மக்கள் ஈடுபட்டனர்.

    சேலம்:

    எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, மொரசபட்டி சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், எடப்பாடி நகர்ப்புற பகுதியினை ஒட்டிய ஒரு சில இடங்களிலும் மிக கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. பூலாம்பட்டி பகுதியில் மேட்டூர் பிரதான சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றன.

    அதிகாலை நேரத்தில் பெய்த கனமழையால் பால் வினியோகம், காய்கறிகள் விற்பனை உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய பணிகள் பாதிப்பிற்கு உள்ளானது. பூலாம்பட்டி பகுதியில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருவதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    எடப்பாடி மட்டுமல்லாமல் ஆத்தூர், மேட்டூரிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலத்தில் கிச்சிப்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் அங்குள்ள மக்கள் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை அதிக பட்சமாக எடப்பாடியில் 47.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 22, மேட்டூர் 17.2, சங்ககிரி 16.4, கெங்கவல்லி 15, தம்மம்பட்டி 10, வீரகனூர் 6, பெத்தநாயக்கன்பாளையம் 4, கரியகோவில் 2, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 140 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×