search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருஞ்சாணி அணை
    X
    பெருஞ்சாணி அணை

    குமரியில் இன்றும் மழை- அணைகள் கண்காணிப்பு

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.24 அடியாக இருந்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மாவட்டத்திலுள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களும் அணைகளும் நிரம்பி வழிந்து வருகின்றன.

    ஏற்கனவே தாழ்வான பகுதியில் தேங்கியிருந்த மழை வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். முஞ்சிறை, அகஸ்தீஸ்வரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இன்றும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக் கிறது.

    இதனால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, அவ்வை சண்முகம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கீரிப்பாரை, தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். குழித்துறை கோதையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.24 அடியாக இருந்தது. அணைக்கு 1145 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1602 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியாக உள்ளது. அணைக்கு 781 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×