search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயனாளி ஒருவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இலவச மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கிய காட்சி.
    X
    பயனாளி ஒருவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இலவச மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கிய காட்சி.

    மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    கோவை மாவட்டத்தில் மின்வாரியம் மூலம் 203 கோடிக்கும் அதிகமான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின் இணைப்பு பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்


    சட்டமன்றத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 4,52,777 பேர் இலவச மின் இணைப்புக்காக காத்திருந்தனர். வரும் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு கொடுக்கப்படும்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. தற்போது வரை 1,123 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 83 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.

    மின்கம்பம், மின்மாற்றி எடுத்து செல்வது உள்பட எந்த விதமான செலவினங்களுக்கும் பணம் வாங்க கூடாது என்றும், அதற்கான அனைத்தையும் மின்வாரியமே செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சருக்கு நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் 13 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.

    கோவை மாவட்டத்தில் மின்வாரியம் மூலம் 203 கோடிக்கும் அதிகமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தன்மானமுள்ள ஆட்சியை முதல்- அமைச்சர் நடத்தி கொண்டு இருக்கிறார். கோவை மாவட்டத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற்றி கொடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தால் 100 சதவீதம் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகராட்சி கமி‌ஷனர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் நடராஜன், சண்முகசுந்தரம், கோவை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், வரதராஜன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×