search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    அம்மாபள்ளி அணையில் இருந்து தண்ணீர் வருகையையொட்டி பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது. பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இதனால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நீர்வரத்து சராசரியாக 200 கனஅடியாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 15-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 480 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் அம்மா பள்ளி அணை முழுவதுமாக நிரம்பியது. அந்த அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் பூண்டி ஏரிக்கு வர தொடங்கியது. வினாடிக்கு 1,029 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் 2 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், அற்றம்பாக்கம், நெய்வேலி, எறையூர், பீமன் தொகுப்பு, கொரக்கன்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிகவநூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிபாளையம், பாளையம், மடியூர், சீமா புரம், வள்ளிவாய்சாவடி, இடையஞ்சாவடி, மணலி, மணலி புதுநகர் வழியாக பாய்ந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.233 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.99 அடியாக பதிவானது. 2.820 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 50 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    Next Story
    ×