search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்குமார் - பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி
    X
    சரத்குமார் - பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

    மதுரையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

    தனிப்படை போலீசார் இன்று அதிகாலை சம்மட்டிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த சரத்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாகி பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை மாநகரில் வழிப்பறி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை ஆலோசனையின் பேரில், திலகர் திடல் உதவி கமி‌ஷனர் ரமேஷ் மேற்பார்வையில் எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை பழைய விளாங்குடியை சேர்ந்த அண்ணா துரை மகன் ஹரிஹரசுதன் (வயது 22). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

    ஹரிஹரசுதன் நேற்று இரவு அரசரடி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி “சட்டைப் பையில் இருக்கும் பணத்தை எடு’ என்று மிரட்டியுள்ளார்.

    இதற்கு அவர் மறுத்து விட்டார். அப்போது அந்த வாலிபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சட்டைப் பையில் இருக்கும் பணத்தை கொடு, இல்லையென்றால் உன்னை சுட்டுக் கொன்று விடுவேன்” என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

    இதனால் பயந்துபோன ஹரிஹரசுதன் தன்னிடமிருந்த 1100 ரூபாயை அந்த வாலிபரிடம் கொடுத்து உள்ளார். இதனை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர் சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    இதுதொடர்பாக எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் ஆட்டோ டிரைவர் கொடுத்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தீவிர விசாரணை நடத்தியதில் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ரவுடி சரத்குமார் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று அதிகாலை சம்மட்டிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த சரத்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாகி பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

    சரத்குமாருக்கு நவீன ரக துப்பாக்கி எங்கிருந்து வந்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாநகரில் குற்ற சம்பவம் நடந்த அடுத்த சில மணிநேரங்களில் குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படைக்கு போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டு தெரிவித்து உள்ளார்.






    Next Story
    ×