search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூரை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு.
    X
    ஆத்தூரை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு.

    கூட்டுறவு சங்க தலைவரின் வீடு-27 இடங்களில் சோதனை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டன.

    இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி. வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது. இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக இருக்கும் இளங்கோவன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இவரது சொந்த ஊர் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் புத்திரகவுண்டம்பாளையம் ஆகும். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் முறைகேடான வகையில் பணம் வசூல் செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

    இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இளங்கோவனும், அவரது மகன் பிரவீன்குமாரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சேலம், சென்னை, நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் 27 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இளங்கோவனுக்கு சொந்த வீடு மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்த உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் முசிறி அருகே சொரியம்பட்டி மேடு பகுதியில் அமைந்துள்ள இளங்கோவன் மகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள்.

    திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இளங்கோவனின் சொந்த ஊரான ஆத்தூர் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டில் இன்று காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடங்கினர்.

    அந்த பகுதியில் உள்ள இளங்கோவனின் சகோதரி ராஜகுமாரி வீடு, இளங்கோவனின் மாமனார் வீடு, உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் தனித்தனி குழுவாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தண்ணீர் தொட்டிகளிலும், மொட்டை மாடியிலும் சோதனை நடத்தினர். இப்படி வீடு முழுவதும் சல்லடை போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்து யாரையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி தரவில்லை.

    இந்த சோதனையின் போது இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் இளங்கோவன் வீடு மற்றும் சோதனை நடைபெறும் இடங்களில் திரண்டனர். இதனால் சோதனை நடைபெற்ற இடங்களில் பரபரப்பு நிலவியது.

    சேலத்தில் 18 இடங்களிலும், நாமக்கல்லில் 2 இடங்களிலும், சென்னையில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் இளங்கோவனுக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் சோதனை நடத்தி வரும் போலீசார், திருச்சியில் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த 5 மாவட்டங்களில் சோதனை நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பணமதிப்பு இழப்பின் போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.600 கோடி பணம் பரிமாற்றம் செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இளங்கோவன் இருந்தார். இவர் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதால் இன்றைய சோதனை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×