search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் காதர்பேட்டையில் ஆடைகளை தேர்வு செய்யும் பொதுமக்கள்.
    X
    திருப்பூர் காதர்பேட்டையில் ஆடைகளை தேர்வு செய்யும் பொதுமக்கள்.

    வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் திருப்பூர் காதர்பேட்டையில் தீபாவளி ஆடைகள் விற்பனை மந்தம்

    காதர்பேட்டை சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பின்னலாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இவை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்து செயல்படுகின்றன. 

    இவற்றின் உற்பத்தி சார்ந்து பனியன் மொத்த மற்றும் சில்லரை விற்பனைக்கென திருப்பூர் காதர்பேட்டையில் கடைகள் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை நிறுவனங்கள் உள்ளன. 

    முதல் தரம், 2-ம் தரம் என தரங்களின் அடிப்படையில் குறைந்த விலையில் இங்கு பனியன் உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  

    காதர்பேட்டை சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பின்னலாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. இதனால் காதர்பேட்டையில் எப்போதும் ஆடை விற்பனை மும்முரமாக நடைபெறும். 

    காதர்பேட்டைக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளில் முக்கிய பங்கு வகிப்பது கேரள வியாபாரிகள்தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கேரளா மற்றும் வடமாநில வியாபாரிகள் ஏராளமானோர் திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் உள்ளிட்ட ஆடைகளை வாங்கி சென்று விற்பனை செய்வது உண்டு.

    இதேப்போல் வடமாநிலங்களில் ஜவுளி கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் மொத்தமாக ஆடைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் என பலர் தங்களுக்கு தேவையான ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி செல்வார்கள். 
     
    ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதேப்போல் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் மழையால் தீபாவளி ஆடைகள் வாங்க திருப்பூர் காதர்பேட்டைக்கு வரும் கேரளா மற்றும் வட மாநில வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது. 

    தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வியாபாரிகள் வருகையால் களை கட்டி காணப்படும் காதர்பேட்டை வியாபாரிகள் வருகை குறைவால் களையிழந்து காணப்படுகிறது. 

    இதுகுறித்து காதர்பேட்டை வியாபாரிகள் கூறுகையில்:  

    கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் மழையால் தீபாவளி ஆடைகள் வாங்க வரும் கேரள-வடமாநில வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

    பெரும்பாலான வியாபாரிகள் போன் மூலம் காதர்பேட்டை வியாபாரிகளை தொடர்பு கொண்டு தேவையான ஆடைகளை அனுப்பி வைக்குமாறு கூறுகின்றனர். அதன்படி நாங்கள் ஆடைகளை லாரிகள் மற்றும் ரெயில்களில் அனுப்பி வைத்து வருகிறோம். 

    தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து  ஜவுளிக்கடை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் வந்து மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. 

    இந்த ஆண்டும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் வியாபாரிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு ஆடைகள் விற்பனை சூடுபிடிக்கும். பொதுமக்கள் எப்போதும் போல் ஆடைகள் வாங்க வருகின்றனர் என்றனர்.
    Next Story
    ×