search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுக்குள் வரும் கொரோனா - கூடுதல் பணிச் சுமையால் தவிக்கும் செவிலியர்கள்

    துவக்கத்தில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம், கம்ப்யூட்டரில் பதிவு செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது பணியாளர்கள் கிடையாது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வந்தது. குறிப்பாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்தப்படியே  இருந்தது. 

    இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா கட்டுக்குள் வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதிவரை 192 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஒரே நாளில் 24 பேர் வரை பலியாக நேர்ந்தது. ஜூலையில் 57 பேர் இறந்தனர். தடுப்பூசி செலுத்தியதன் விளைவாக தற்போது கொரோனா மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்துள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதத்தில் தொற்று பாதிப்புடன் இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்தது. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது பலி எண்ணிக்கை குறைந்ததால் சுகாதாரத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். 

    நடப்பு மாதத்தில் இறப்பு விகிதம் மேலும் குறைந்துவிட்டது. அதிகபட்சமாக கடந்த 6-ந்தேதி 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 7, 14, 16 மற்றும் 19-ந்தேதிகளில் தலா 2 பேர் பலியாகினர். கடந்த ஜூன் - 192, ஜூலை - 57, ஆகஸ்டு  - 72, செப்டம்பர் - 16 ஆகவும் இருந்த இறப்பு, நடப்பு மாதத்தில் ரூ.15 ஆக குறைந்துள்ளது. 

    இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறுகையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மூச்சுத்திணறல் போன்ற அசாதாரண சூழல் தற்போது இல்லை. கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியதால் தொற்று பரவலும் பாதிப்பும் கட்டுக்குள் வந்துள்ளது என்றனர்.

    இந்த நிலையில் நேற்று புதியதாக மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் இதுவரை 94 ஆயிரத்து 596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமான 74 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 92 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். 

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 815 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 971 பேர் பலியாகி உள்ளனர்.

    இதனிடையே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்துவோர் விபரத்தை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய பணியாளர்கள் இல்லாததால் செவிலியர்கள் பாதிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை, 7 மணி முதல் மதியம்1 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    தினமும் 60 டோஸ் அளவில் தடுப்பூசி போடப்படுவதால் மக்கள் ஆர்வத்துடன் மருத்துவமனை வருகின்றனர். அவ்வகையில் இரு செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் பெயர், செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்டவை பதிவேட்டில் எழுதப்படுகிறது.

    இருப்பினும், அந்த விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய பணியாளர்கள் பல இடங்களில் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக செவிலியர்களே அதற்கான பணியை மேற்கொண்டும் வருகின்றனர். 

    சில நேரங்களில் போதிய அளவு தடுப்பூசி இருப்பில் இருந்தாலும், மருத்துவமனைகளில் இதர வேலைகள் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

    மருத்துவ பணியாளர்கள் கூறுகையில்:

    துவக்கத்தில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம், கம்ப்யூட்டரில் பதிவு செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது பணியாளர்கள் கிடையாது. வழக்கமான பணிகளுடன் செவிலியர்களே தகவல்களை பதிவு செய்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதற்கென பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×