search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஒரு கிலோ ரூ.15க்கு விற்பனை - சின்னவெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் கவலை

    சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விதை, நடவு, உரம், மருந்து, அறுவடை என ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவு பிடிக்கிறது.
    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில்  சின்ன வெங்காயம் சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நேரடியாக காய் விதைப்பு மற்றும் நாற்று முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. காய் நடவு செய்தால், 90 நாட்களிலும் நாற்று முறையில்  75 நாட்களிலும் சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராகிறது.

    கடந்த 4 மாதத்திற்கு முன் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வை சந்தித்தது. வெங்காயம் நடவு செய்த போது கிலோ ரூ. 65 முதல் ரூ.80 வரை விற்று வந்தது.

    தற்போது உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்த வெங்காயம் அறுவடை துவங்கி நடந்து வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியாமலும், ஈரப்பதம் காரணமாக விளைந்த வெங்காயம் அழுகியும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    சீதோஷ்ண நிலை மாற்றம், வேர் அழுகல் உள்ளிட்ட நோய் தாக்குதல், மழை காரணமாக  சின்ன வெங்காயம் மகசூல் பாதியாக குறைந்த நிலையில், விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

    தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.15 வரை மட்டுமே விற்று வரும் நிலையில் மழை காலம் என்பதால், விலை வரும் வரை இருப்பு வைக்க முடியாமல் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விதை, நடவு, உரம், மருந்து, அறுவடை என ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவு பிடிக்கிறது. சராசரியாக ஏக்கருக்கு 7 டன் வரை மகசூல் இருக்கும். 

    ஆனால் நடப்பாண்டு, நோய்த்தாக்குதல், மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஏக்கருக்கு, அதிகபட்சமாக 3.5 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. அதோடு விலையும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கிலோ ரூ.15 வரை மட்டுமே விற்கிறது.

    பருவ மழை தொடங்கியுள்ளதால் காய வைத்து இருப்பு வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    அறுவடை செய்த வெங்காயம் இருப்பு வைத்து விலை வரும் போது விற்பனை செய்வதற்கு பட்டறைகள் அமைக்க அரசு மானிய உதவியை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு மற்றும் நேரடி விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர். தங்கம் போல் ஏறி இறங்கி வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.200க்கு மேல் விற்கப்பட்டது. தற்போது ரூ.15க்கு விற்கப்படுவது விவசாயிகள் மத்தியில் கவலையையும், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×