search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    முதல்-அமைச்சர் செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லை- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு

    ‘‘தமிழக முதல்-அமைச்சரின் பாதுகாப்புக்காக அணிவகுத்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் பயணத்தின்போது எதிரே வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவது இல்லை’’ என்றார்.
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அடையாறில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை தடுப்பு அமைத்து தடுத்தபோது, அதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வந்த காரும் சிக்கிக் கொண்டது.

    இதனால் சுமார் 25 நிமிடங்கள் காலதாமதமாக அவர் ஐகோர்ட்டுக்கு வந்தார். பின்னர், போலீசாரின் செயலுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, உள்துறை முதன்மை செயலாளர் பிரபாகரனை ஆன்-லைன் மூலம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.

    அவ்வாறு ஆஜரான உள்துறை செயலாளர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனரை அழைத்து உடனே விளக்கம் கேட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக உத்தரவாதம் அளித்தார்.

    தமிழ் நாடு அரசு


    இந்தநிலையில், உள்துறை செயலாளரை மீண்டும் ஆன்-லைன் வழியாக ஆஜராக வேண்டும் என்று தகவல் தெரிவிக்கும்படி மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவிடம் நீதிபதி கூறினார். இதன்படி, நேற்று பிற்பகலில் உள்துறை செயலாளர் பிரபாகரன் ஆஜராகி, ‘‘தமிழக முதல்-அமைச்சரின் பாதுகாப்புக்காக அணிவகுத்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் பயணத்தின்போது எதிரே வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவது இல்லை’’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘முதல்-அமைச்சர் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து இடையூறு எதுவும் இல்லாதது பாராட்டுக்குரியது. இந்த விசயத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகிறேன். நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வேண்டாம். யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது. தாழ்ந்தவர்களும் கிடையாது. நடந்த சம்பவத்தை தெரிவித்த உடன், மறுநாளே போக்குவரத்தை சீரமைத்தமைக்கு நன்றி. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் நீதிபதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதற்காக முதல்-அமைச்சரின் பாதுகாப்பு விசயத்தில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள வேண்டாம்’’ என்று கூறினார்.

    Next Story
    ×