search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாதது வருத்தம் அளிக்கிறது- அமைச்சர் பேட்டி

    தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 68 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 25 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 174-வது வார்டு மடுவின்கரை, பாரதி நகர், பாரதி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து உடற்பயிற்சி செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாவுத்துறை அலுவலர்கள், பொதுமக்களிடம் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    இங்கிலாந்தில் 40 ஆயிரம் என்கிற அளவில் தொற்று உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் குறைந்து பிறகு கூடிக்கொண்டே செல்கிறது. எனவே உலக நாடுகள் எல்லாம் அச்சப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த காலத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பதை கடமையாக கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 68 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 25 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். இது போதுமானதல்ல. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 வயதை தாண்டியவர்கள் எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 5 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி முதல் தவணை தடுப்பூசி 70 சதவீதத்தினர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் 68 சதவீதம் செலுத்தி உள்ளோம்.

    கொரோனா தடுப்பூசி


    தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. 2-வது தவணை தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்திட வேண்டுமோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே வரும் சனிக்கிழமை (23-ந் தேதி) நடைபெறுகிற 6-வது மெகா முகாமில் 25 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தற்போது 48 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சனிக்கிழமை பொதுமக்களின் வசதிக்காக 50 ஆயிரம் முகாம்கள் மூலம் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிள் செலுத்தப்பட உள்ளது.

    டெங்கு காய்ச்சல் இப்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. 340 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×