search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வடகிழக்கு பருவமழை 26-ந்தேதி தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையாகும்.

    இந்த பருவமழை வட மாநிலங்களில் அதிகளவு பெய்யும். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டுமே தென்மேற்கு பருவமழை கிடைக்கும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்யும்.

    வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்திற்கு அதிகளவு கிடைக்கும். இதை நம்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். மேலும் தமிழகத்தின் குடிநீர் தேவையையும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

    இந்த வருடம் இயல்பை விட அதிகளவு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் குறைவான மழை பொழிவு இருந்தாலும் தொடர்ந்து வந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில் விலகினாலும், தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அடுத்த வாரத்தில் பருவமழை முடியக்கூடிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும்.

    வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கில் வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

    மழை


    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது. எனவே தென் இந்திய பகுதிகளில் வருகிற 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 33 செ.மீட்டர் இயல்பாக பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 39 செ.மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகும்.

    சென்னை மாவட்டத்தில் 46 செ.மீட்டர் இயல்பான மழை பெய்ய வேண்டும். ஆனால் 50 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் அதிகமாகும். இந்த பருவமழை ஜூலை மாதத்தில் அதிகமாக பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×