search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்- ராமதாஸ்

    பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீப ஒளித்திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை மற்றும் முன்பணம் வழங்கப்படவில்லை. இந்த தாமதத்தால் பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் குடும்பத்தினர் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

    தமிழக அரசுக்கு சொந்தமாக 70-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீப ஒளித்திருநாளைக் கொண்டாடுவதற்காக ஊக்கத்தொகையும், முன் பணமும் வழங்கப்படுவது வழக்கமாகும்.

    தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் மிகவும் பெரியவை அரசுப் போக்குவரத்துக் கழகங்களும், மின்சார வாரியமும் தான். இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும் தீப ஒளித்திருநாளை கூட தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாட முடியாத அளவுக்கு பணி செய்ய நேரிடும்.

    தீப ஒளி காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதால் மின் வாரியப் பணியாளர்களும், தீப ஒளிக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களும் தீப ஒளிக்கு முன்பாக குறைந்தது பத்து நாட்களாவது விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும்.

    அதனால் அதற்கு முன்பாகவே தீப ஒளிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு இதுவரை ஊக்கத்தொகை வழங்கவில்லை.

    கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அளவில் தான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி ஊக்கத்தொகை அளவு 10 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பே வெளியாகவில்லை.

    பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீதம் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுவதால், நடப்பாண்டில் அதை 25 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×