search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அப்பார்ட்மெண்ட்.
    X
    கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அப்பார்ட்மெண்ட்.

    சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- சிக்கலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்

    கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையொட்டி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    இதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

    விஜயபாஸ்கர்


    விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, கொரோனா கால கட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல் குவாரி, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

    திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான வீடு, கிராப்பட்டி பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் குருபாலன் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை தொடர்கிறது.

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டில் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

    அஜய்குமார் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி. கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    அனைத்து இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பான விரிவான தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை வெளியிட உள்ளனர்.

    43 இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×