search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரும்பு
    X
    கரும்பு

    கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500-ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்-முதல்வருக்கு அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் மனு

    போக்குவரத்து வாடகையை அரசு ஏற்று கொள்வது போல, கரும்பு வெட்டும் கூலியையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    மடத்துக்குளம்:
     
    விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022 மார்ச் இரண்டாம் வாரத்தில் அரவையை துவங்க வேண்டும். அரவை துவங்குவதற்கு முன்பாக இதர மாவட்டங்கள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து கரும்பு வெட்ட ஆட்களை தயார் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது உள்ள இடுபொருள் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறை, உரிய நேரத்தில் வெட்ட ஆட்கள் கிடைக்கப்பெறாத நிலையின் காரணமாக விவசாயிகளுக்கு தற்போது அரசு கொடுக்கும் கரும்பு விலையானது ஏனைய உணவுப் பொருட்களை ஒப்பிடும்போது கட்டுப்படியாக இல்லை.

    ஆகவே நடப்பு நிதியாண்டில் அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வீதம் வழங்க வேண்டும். போக்குவரத்து வாடகையை அரசு ஏற்று கொள்வது போல, கரும்பு வெட்டும் கூலியையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஆலையை நவீன படுத்துவதற்கு அரசு அறிவித்த 110-வதுவிதியின் கீழ் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆலைக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை விடுவித்து எந்திரங்களை புனரமைக்க வேண்டும்.

    ஆலையின் நலன் கருதி விவசாயிகள் தங்களது இழப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ஆலைக்கு கரும்பு வழங்கினாலும் கூட ஆலய நிர்வாகம் போதிய சர்க்கரை உற்பத்தியில் கட்டுமானம் எடுப்பதில்லை. இதற்கு ஆலையில் பணி புரியும் துறை சார்ந்த அதிகாரிகளே காரணம்.

    கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கரும்பின் சர்க்கரைச்சத்து சுமார் 10 சதவீதம் இருக்கக் கூடிய நிலையில், ஆலையானது 7.82 சதவீதம் மட்டுமே எடுத்துள்ளனர். ஆலை அரவை சுத்திகரிப்பு பணிகள் துவங்கும் போது  தலைமை பொறியாளர் மற்றும் தலைமை ரசாயனர் பணி நியமனம் செய்திடவும் அவர்களே தொடர்ந்து அரவை முடியும் காலம் வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

    ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சிப்பந்திகளுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படுவதில்லை. எல்.ஐ.சி., பி.எப்., மற்றும் இதர பிடித்தங்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.  மாதம்தோறும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    எரிசாராய ஆலை இரண்டு ஆண்டுகளாக கரும்பு கற்கண்டு இல்லாத காரணத்தினால் இயக்கப்படாமல் உள்ளது. அதனை தொடர்ந்து இயக்க வேண்டும். வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கரும்பு பயிர் கடன் காலதாமதமாக வழங்கப்படுவதால் அபராதம் விதிப்பதை தவிர்க்கும் பொருட்டு காலதாமதமின்றி கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயம் சம்பந்தப்பட்ட பண்ணை கருவிகள் ,டிராக்டர்கள், உழவு இயந்திரம், கலவை இயந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், களை எடுக்கும் எந்திரம் போன்ற பண்ணை எந்திர கருவிகளை தேவையான அளவு கிடைக்க அரசு முன்னுரிமை அளித்து  விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.

    விவசாயிகள் பயன் அடைய கூடிய வகையில் அமராவதி ஆற்றின் குறுக்கே அரசு அறிவித்துள்ளபடி போதிய தடுப்பணைகள் கட்டி தர அரசு முன்வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அதனை  வேளாண் துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
    Next Story
    ×