search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    இனி வேறு யாருடனும் கூட்டணி கிடையாது - சிறப்பு செயற்குழுவில் ராமதாஸ் பேச்சு

    நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா? இப்போது அந்த பலமெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே? என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம், ஆன்-லைன் மூலமாக நேற்று நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகம்-புதுச்சேரியை சேர்ந்த மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பா.ம.க.வின் செயல்பாடுகள், கூட்டணி குறித்த நிலைப்பாடு, எதிர்வரும் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா? இப்போது அந்த பலமெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே?

    எனவே இனி ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சி விட்டு கட்சி தாவுவோர் இப்போதே சென்றுவிடுங்கள். கட்சியில் இருந்துகொண்டே யாரும் துரோகம் செய்யாதீர்கள். இனி போட்டி, பொறாமை இருக்கக்கூடாது. இனி கட்சிக்கு என ஒரு உளவுப்படை வைக்க போகிறோம். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பல நேரங்களில் நாம் உதவியிருக்கிறோம். ஒரு கட்சி நம்மை களங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கவுரவப்படுத்தியது. ஆனால் சூழ்நிலைக்கு நாம் உண்மையாக இருந்திருக்கிறோம்.

    இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. கடைசிநேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது. இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். வீடு வீடாக சென்று பா.ம.க.வின் பெருமைகளை, செயல்திட்டங்களை சொல்லுங்கள். தீபாவளிக்கு பிறகு பா.ம.க. நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். அதை செயல்படுத்துவோம். நமது வளர்ச்சியை பற்றி மட்டுமே இனி நாம் சிந்திப்போம். மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மாற்றத்தை ஏற்பார்கள். என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    அன்புமணி ராமதாஸ்

    தமிழக நலனுக்காக பா.ம.க.விடம் எத்தனையோ செயல்திட்டங்கள் இருந்தும் நாம் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. எனவே நிர்வாக சீர்திருத்தமே இப்போதைய காலத்தின் கட்டாயம். அத்துடன் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது என்ற மனநிலையில் இப்போதிருந்தே நாம் கடுமையாக உழைக்க தொடங்கவேண்டும்.

    இப்போது 3-வது பெரிய கட்சியாக இருக்கும் பா.ம.க. அடுத்த 2 ஆண்டுகளில் 2-வது இடத்துக்கும், அடுத்த 4 ஆண்டுகளில் முதலாவது கட்சியாகவும் வளரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×