search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் - விரைவில் அமல்

    பயணிகளின் நெரிசலை குறைப்பதற்காக குமார் நகர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, துணை கமிஷனர் ரவி ஆகியோர் உத்தரவுபடி திருப்பூர் போக்குவரத்து உதவி கமிஷனர் மற்றும் வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் திருப்பூரில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 

    இதையொட்டி திருப்பூர் மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளான புதிய பஸ் நிலையம் நுழைவு வாசல் மற்றும் வெளிப்பகுதி, லட்சுமி நகர் சந்திப்பு, புஸ்பா சந்திப்பு, கீரணி சந்திப்பு, பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், சாந்தி தியேட்டர் பஸ் நிலையம், வளர்மதி பாலம், மங்கலம் ரோடு பஸ் நிறுத்தம், மாநகராட்சி சந்திப்பு, புதிய மார்க்கெட் வீதி, பழைய பஸ் நிலையம், கோவில் வழி பஸ் நிலையம் உள்ளிட்ட 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்திலும் போலீசார் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர். சாலையோர கடைகள் அனைத்தும் ஒவ்வொரு சாலையுடன் மக்கள்தொகை இருப்புக்கு தக்கவாறு அனைத்து சாலையிலும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    அரசு போக்குவரத்து கழகத்துடன் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் நெரிசலை குறைப்பதற்காக குமார் நகர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.  

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் காங்கேயம் ரோட்டில் இருந்து முதலிபாளையம் பிரிவு, பெருந்தொழுவு சாலை வழியாக கோவில்வழி பஸ் நிலையத்திற்கு சென்றடைய வேண்டும். பின்பு அதே வழியில் காங்கேயம் சாலையை அடைந்து வலது புறமாக திரும்பி செல்ல வேண்டும். 

    ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து ஊத்துக்குளி சாலை வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் கூலிபாளையம் நால்ரோடு அடைந்து வலதுபுறம் திரும்பி வாவிபாளையம், நெருப்பெரிச்சல் ரிங் ரோடு வழியாக பூலுவப்பட்டியை சென்றடைந்து பெருமாநல்லூர் சாலையிலிருந்து புதிய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும். பின்னர் அதே வழித்தடத்தில் திரும்பி செல்ல வேண்டும்.

    அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூரு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, பண்ணாரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அவினாசி வழியாக தற்காலிக பஸ் நிலையமான திருப்பூர் குமார் நகர் பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மைதானத்துக்கு வந்தடைந்து பயணிகளை இறக்கி பின்னர் அங்கிருந்து ஏற்றிச் செல்ல வேண்டும். 

    ஊத்துக்குளி ரோட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கோர்ட்டு ரோடு வழியாக குமரன் சாலைக்கு செல்லக் கூடாது. குமரன் சாலையிலிருந்து ஊத்துக்குளி சாலைக்கு அனைத்து வாகனங்களும் செல்லலாம். கோர்ட்டு ரோடு ஒரு வழிப்பாதையாக மட்டுமே செயல்படும். 

    பல்லடம் ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
    Next Story
    ×