search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் பனியன், பாத்திர தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் - தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

    வருகிற நவம்பர் 4-ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில்போனஸ் குறித்த எதிர்பார்ப்புகள் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை தயாரிப்பு மற்றும் பல்வேறு வகை ஜாப்-ஒர்க் நிறுவனங்களில் வெளி மாவட்டம், வெளி மாநில தொழிலாளர்கள் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போனஸ் தொகை கிடைப்பதால் பின்னலாடை தொழிலாளர்களின் பண்டிகை கொண்டாட்டத்தில் தீபாவளி முக்கியமானதாக உள்ளது. 

    வருகிற நவம்பர் 4-ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் போனஸ் குறித்த எதிர்பார்ப்புகள் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சம்பள உயர்வு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக தொழிற்சங்கங்கள் போனஸ் குறித்த கோரிக்கை கடிதத்தை ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு அனுப்பி வருகின்றன. 

    சி.ஐ.டி.யு., பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், ‘சைமா’, ஏற்றுமதியாளர் சங்கம், நிட்மா, டீமா, டெக்மா, சிம்கா சங்கங்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலைவாசி உயர்ந்துள்ளது. 

    அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். தொழிலாளர்கள் பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் கையில் கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். 

    பீஸ் ரேட், கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் பணி நாட்களை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பூர், சி.ஐ.டி.யு., பாத்திர தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் அனுப்பர்பாளையம் வட்டாரத்தில் வேலை செய்யக்கூடிய பாத்திர பட்டறை தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை விட, கூடுதல் போனஸ் முன்கூட்டியே வழங்க வேண்டும். இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு கூட்டத்தை நடத்தி கோரிக்கையை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    பாத்திர உற்பத்திக்கு தேவையான தகடு, சோப்பு, மாப்பு உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாத்திர உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே பொருட்களின் விலையேற்றத்தை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×