search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் பி.ஏ.பி., வாய்க்கால்.
    X
    பல்லடம் பி.ஏ.பி., வாய்க்கால்.

    பல்லடம் பி.ஏ.பி., வாய்க்காலில் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    வாய்க்காலில் ஒருவரை தள்ளி கொலை செய்தாலும் காயங்கள் எதுவும் இல்லாவிட்டால், அது தற்கொலையாகவே கருதப்படும் நிலை உள்ளது.
    பல்லடம்:

    பல்லடம்பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பி.ஏ.பி.பாசனத்திட்டத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, காங்கேயம் உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. 

    திருமூர்த்தி மலையில் இருந்து பி.ஏ.பி.,மெயின் வாய்க்கால் 124 கிலோ மீட்டர் செல்கிறது. மெயின் வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. 

    இந்த நிலையில்பி.ஏ.பி.,வாய்க்கால் வழியாகச் செல்லும் ரோட்டை  பொதுப்பணித்துறையினர் வேறு யாரும் உள்ளே நுழைந்து விட முடியாதபடி  பூட்டுப்போட்டு பாதுகாத்தனர். இப்போது அந்த நடைமுறையும் இல்லை. இதனால் சமூக விரோதிகளுக்கு இது சாதகமாக அமைந்துவிட்டது.

    போதை ஆசாமிகள் பி.ஏ.பி., வாய்க்காலை திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். பி.ஏ.பி.,வாய்க்காலில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் கும்பலாக அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனை தட்டி கேட்கமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளோம். பி.ஏ.பி.வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போதெல்லாம் தினமும் பிணங்கள் மிதந்து வருகின்ற நிலை உள்ளது. 

    இதில் வாய்க்காலில் துணி துவைக்க செல்பவர்கள், வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தவர், நீச்சல் தெரியாதவர்கள் என பலரும் அடங்குவர். இதில் வாய்க்காலில் ஒருவரை தள்ளி கொலை செய்தாலும் காயங்கள் எதுவும் இல்லாவிட்டால், அது தற்கொலையாகவே கருதப்படும். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பொங்கலூர் கவுண்டம்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் தலையில் வெட்டுக்காயங்களுடன் மிதந்து வந்த சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதத்தை கைப்பற்றி அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை நடந்தது ஓரிடம், உடலை மீட்டது வேறொரு இடம் என்பதால் தடயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    கொலையான நபரை  அடையாளம் காணமுடியாத நிலையில்  கொலையாளிகளை கண்டறிவது மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது. 

    எனவே பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க போலீசார், பொதுப்பணித்துறையினர், விவசாயிகள் என முத்தரப்பு கூட்டு அமைப்பு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×