search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலத்திற்கு ரூ.2 லட்சம் குட்கா கடத்திய வாலிபர்கள் கைது

    பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு ரூ.2 லட்சம் குட்கா பொருட்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    தமிழகத்தில குட்கா பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சேலம் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி குட்கா பொருட்கள் விற்பனை செய்த பலரை கைது செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செவ்வாய்பேட்டையில் குட்கா மொத்த விற்பனை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் அந்த தொழிலை கைவிட்டு சொந்த ஊருக்கு சென்று வி ட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி டிரைவர் மற்றும் அதில் வந்த மற்றொருவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பெங்களூருவை சேர்ந்த விவேக்ராஜ் (வயது 29) மற்றும் மைசூருவை சேர்ந்த முகமது சுனைத்கான் (23) என்பதும், பெங்களூருவில் இருந்து ராஜபாளையத்துக்கு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு செல்வதாகவும் கூறினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் ஏறி அதில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

    அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை சேலத்திற்கு கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சேலம் அன்னதானப்பட்டி கந்தப்பா காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சோதனை செய்தனர். அதில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனில் மதன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி, சரக்கு ஆட்டோவில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்று வந்தது தெரியவந்தது.

    மொத்தம் 51 மூட்டைகளில் 750 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மதனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×