search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுத பூஜைக்காக அலங்கார பொருட்களை வாங்கும் பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    ஆயுத பூஜைக்காக அலங்கார பொருட்களை வாங்கும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

    ஆயுத பூஜை கொண்டாட்டம் - களை கட்டும் திருப்பூர்

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆயுதபூஜை நடத்தி திருஷ்டி கழிக்க பூசணிக்காயில் குங்குமம் தடவி உடைப்பது வழக்கம் .
    திருப்பூர்:

    ஆயுதபூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. 

    திருப்பூர் பூ மார்க்கெட், பழமார்க்கெட், மளிகை கடைகள் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர். இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டுகளில் திரண்டனர்.  

    இன்று மாலை முதல் கூட்டம் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுத பூஜையில் கடலை, பொரி, சுண்டல் வைத்து வழிபடுவது வழக்கம். அதற்காக  கடலை, பொரி மற்றும் மிட்டாய் வகைகள் விற்பனை களைகட்டியிருந்தது. 

    பொரி விலை கிலோ ரூ.80க்கும், 7 கிலோ பை ரூ.450 க்கும் விற்கப்படுகிறது. இதேபோல, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பழக்கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பூசணிக்காய் ரூ.25 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. 

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆயுதபூஜை நடத்தி திருஷ்டி கழிக்க பூசணிக்காயில் குங்குமம் தடவி உடைப்பது வழக்கம் என்பதால் ஆயுத பூஜையை முன்னிட்டு, பூசணிக்காய் விற்பனைக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளது.

    கரும்புகள், மாவிலை தோரணங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரிய கரும்பு ஜோடி ரூ.90 முதல் ரூ.100 வரையும், சிறிய கரும்பு மூன்று ரூ.100க்கும் விற்கப்படுகின்றன.

    மேலும் திருப்பூரில் மாநகரின் முக்கிய வீதிகளில் தற்காலிக கடை அமைத்து செவ்வந்தி, கடலை பொரி, மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் அப்பகுதி களை கட்டி காணப்படுகிறது.

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில்  தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நிறுவனங்களை அலங்கரிக்க அலங்கார பொருட்கள் வாங்கப்பட்டு வருவதால் அவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 

    பனியன் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில்:

    ஆயுத பூஜையை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயுத பூஜை  முடிந்ததும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது  தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்புதான் வழங்குகின்றனர். எனவே ஆயுதபூஜை அன்று போனஸ் வழங்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அங்குள்ள பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 
    Next Story
    ×