search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ஆயுத பூஜையையொட்டி பழங்களை வாங்கும் மக்கள்.
    X
    திருப்பூரில் ஆயுத பூஜையையொட்டி பழங்களை வாங்கும் மக்கள்.

    பண்டிகை கொண்டாட்டம் - கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டுகோள்

    ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் கூட்டத்துக்குள் வந்து செல்கின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முக்கிய சந்திப்பு, வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நாளை ஆயுத பூஜையையொட்டி பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஆடை வாங்கவும் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர் முககவசம் அணியாமல்  கூட்டத்துக்குள் வந்து செல்கின்றனர். குடும்பத்துடன்  குழந்தைகளை அழைத்து கொண்டு வருவோர் துளியும் விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா மெல்ல குறைந்து வருகிறது. இதே நிலை தொடர அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். முடிந்தவரை கூட்டமான இடங்களுக்கு செல்லக் கூடாது. 

    மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவருக்கு சளி, இருமல் வர வாய்ப்புள்ளது. வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் கவனமுடன் இருக்க வேண்டும். உடல் நல குறைபாடு இருந்தால், உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்றார். 

    ஆயுதபூஜையையொட்டி திருப்பூர் மண்டலத்தில் இருந்து 60 சிறப்பு பஸ் தேனி, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, காரைக்குடி, நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று மாலை முதல் புதிய மற்றும் பழைய பஸ்  நிலையம், கோவில்வழி, யுனிவர்சல் தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம் தொடங்குகிறது. 
    Next Story
    ×