search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஹரிகிருஷ்ணன்
    X
    கைதான ஹரிகிருஷ்ணன்

    ஆன்லைன் சூதாட்டம் நடத்தியவர் கைது: ரூ.25 லட்சம்-தங்க நகைகள் பறிமுதல்

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்த விக்னேஷ், கேசினோ, லைவ் ஸ்போட்ஸ் ஆகிய 2 இணைய தளங்களில் விளையாடி பணத்தை இழந்தது தெரிய வந்தது.
    சென்னை:

    சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் விக்னேஷ். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்தார். இதுபற்றி விக்னேஷ் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்த விக்னேஷ், கேசினோ, லைவ் ஸ்போட்ஸ் ஆகிய 2 இணைய தளங்களில் விளையாடி பணத்தை இழந்தது தெரிய வந்தது.

    இந்த இணையதளங்கள் மூலமாக கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் சூதாட்டத்தை நடத்தியவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    ஹரிகிருஷ்ணன் பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேற்கண்ட இணைய தளங்களில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்டவைத்து பின்னர் அதனை சூதாட்டமாக மாற்றி அதற்கு அவர்களை அடிமை ஆக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ஹரிகிருஷ்ணனை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஹரிகிருஷ்ணனிடம் இருந்து ரூ.24 லட்சத்து 68 ஆயிரத்து 300 ரொக்கப் பணம் 193 கிராம் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு அவர் பயன்படுத்திய 10 செல்போன்கள், ஒரு ஐபேட், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ஹரிகிருஷ்ணனின் தந்தை ஆன்லைன் சூதாட்டம் நடத்தி வந்துள்ளார். அவரது வழியிலேயே இவரும் சூதாட்டங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    ஆன்லைன் சூதாட்டங்களுடன், கிரிக்கெட் விளையாட்டுகளை பயன்படுத்தியும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த வகையில் 30 பேரிடம் பணம் பெற்று அவர் ஏமாற்றியதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஹரிகிருஷ்ணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    Next Story
    ×