search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஏற்காட்டில் தொடர் மழை-மண் சரிவு: சாலை துண்டிப்பால் 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

    வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குப்பனூர் வழியாக மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதையில் ஆங்காங்கு திடீர் நீர் வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது.

    சிற்றருவிகளில் கொட்டும் தண்ணீர் மலைப்பாதைகளில் பெருக்கெடுத்ததால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதையடுத்து 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே சோதனை சாவடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    வெளியூர்களில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த பயணிகள் குப்பனூர் மலைப்பாதை வழியாக சேலத்திற்கு திருப்பி விடப்பட்டனர். சேலத்தில் இருந்து ஏற்காடு சென்ற வாகனங்கள் அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் மூட்டைகளை அடுக்கி கருங்கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடைய சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட கலெக்டர் கார்மேகம் அதனை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் பஸ்கள் குப்பனூர் வழியாக சென்று வருகின்றன. வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் குப்பனூர் வழியாக மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பாதையில் லாரி உள்பட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-வது நாளாக சேலத்தில் இருந்து அடிவாரம் வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×