search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற மழை நீர்
    X
    லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற மழை நீர்

    கோவையில் பலத்த மழை- தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

    கோவை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வெயில் காரணமாக வெப்பச் சலனம் ஏற்பட்டு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

    இதன்படி உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சுந்தராபுரம், வடவள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை பரவலாக மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் திரும்பி வேறு வழியாக சென்றனர்.

    மேலும் அந்த வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸசுக்கு வழி ஏற்படுத்தினர்.

    இதேபோல் மேம்பால பணிகள் நடக்கும் கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அமைதி அடைந்தனர். மேலும் மும்முரமாக நடந்து வந்த மேம்பால பணிகளும் பாதிக்கப்பட்டன.

    இதேபோல் அவிநாசி மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்த தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சித்திரைச்சாவடி, பேரூர் புட்டுவிக்கி உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    கோவையில் நேற்று பகலில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் நேரத்தில் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதம் 83 சதவீதம் இருந்தது. காற்றின் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்தது. இதேபோல் சிறுவாணி அணை நீர்மட்டம் 43.75 அடியாகவும், பில்லூர் நீர்மட்டம் 90 அடியாகவும் உயர்ந்து உள்ளது.
    Next Story
    ×