search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று காலை பெய்த மழையில் இருந்து தப்பிக்க குடைபிடித்து செல்லும் பெண்கள்.
    X
    நாகர்கோவிலில் இன்று காலை பெய்த மழையில் இருந்து தப்பிக்க குடைபிடித்து செல்லும் பெண்கள்.

    நாகர்கோவிலில் கொட்டி தீர்த்த கனமழை- சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்ட ஒரு சில இடங்களில் அறுவடை பணி முடியாததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதமான குளிர் காற்றும் வீசி வருவதால் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவும் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் காலை விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    காலை 10 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்காமல் கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, அவ்வை சண்முகம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இருசக்கர வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி வாகனங்களில் சென்றனர். பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. அதில் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து சென்றனர். இரணியலில் மழை வெளுத்து வாங்கியது. இங்கு கொட்டிய கனமழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 68 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நிலப்பாறை, இரணியல், ஆணைக்கிடங்கு, குளச்சல், குருந்தன் கோடு, அடையா மடை, கோழிப்போர்விளை, முள்ளங்கினா விளை, புத்தன் அணை, கன்னிமார், கொட் டாரம், மைலாடி பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள தென்னை மரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    மலையோர பகுதியான பாலமோர், நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அதற்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டு உள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபநீராக 1338 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் கோதையாறு, குளித்துறையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவி யிலும் கடந்த 2 வாரமாக தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை- 9.4, பெருஞ்சாணி- 7.2, சிற்றாறு1- 12.5, சிற்றாறு2- 17, மாம்பழத்து றையாறு-18, நாகர்கோவில்- 15, பூதப் பாண்டி- 15, சுருளோடு-7, பாலமோர்-10.2, மைலாடி- 8.2, கொட்டாரம்- 5.2, இரணியல்- 68, ஆனைக் கிடங்கு- 20.4, குளச்சல்- 24.6, குருந்தன்கோடு- 36.2, அடையாமடை- 29, கோழிப்போர்விளை- 32, முள்ளங்கினாவிளை- 28, திற்பரப்பு- 19.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்ட ஒரு சில இடங்களில் அறுவடை பணி முடியாததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
    Next Story
    ×