search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான சுந்தரம்.
    X
    பலியான சுந்தரம்.

    கிணற்றில் மூழ்கி பலியான தொழிலாளியின் உடல் இன்று மீட்பு

    கிணற்றுக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு அடிக்கடி சீறி அச்சுறுத்தியது.இதன் காரணமாக சுந்தரத்தின் உடலை மீட்கும் பணி 2 நாட்களாக தடைபட்டது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    சகுந்தலா மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக சகுந்தலாவுக்கு மனநிலை பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சகுந்தலாவை பல்லடம் அருகே உள்ள தேவராயம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சின்னத்துரை கொண்டு போய் விட்டார். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேவராயம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சகுந்தலா தவறி விழுந்தார். இதை வீட்டில் இருந்து பார்த்த அவரது அண்ணன் சுந்தரம் (45)  தங்கையை காப்பாற்ற  அவரும் கிணற்றுக்குள் குதித்தார். 100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. அதன் பின்னர் நீண்டநேரமாகியும் இருவரும் கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்களும், போலீசாரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கி சகுந்தலா இறந்தார்.  

    இதையடுத்து சகுந்த லாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் சுந்தரத்தை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.  

    அப்போது கிணற்றுக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு அடிக்கடி சீறி அச்சுறுத்தியது. இதன் காரணமாக சுந்தரத்தின் உடலை மீட்கும் பணி  2 நாட்களாக தடைபட்டது. இந்தநிலையில் இன்று காலை சுந்தரத்தின் உடல் தண்ணீரில் மிதந்தது. 

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்ற, அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்து இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×