search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

    அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் முதல் மாவட்ட அமைப்பாளராக அவர் அறிவித்தது என்னைத்தான் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த பிறகு இதுவரை புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    இந்த சூழ்நிலையில் புதிய அவைத்தலைவர் தேர்வு மற்றும் கட்சியின் பொன்விழா தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது.

    அதிமுக தலைமை அலுவலகம்

    ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அவைத்தலைவரை பொறுத்தவரை கட்சியின் மிக மூத்த நிர்வாகிகளை நியமிப்பதே வழக்கம்.

    அதன்படி தமிழ்மகன் உசேன், பொன்னையன் ஆகியோர் மிக மூத்த நிர்வாகிகளாக உள்ளார்கள். இவர்களில் பொன்னையன் அவைத்தலைவர் பதவியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்மகன் உசேன் இந்த பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:

    கேட்பது உண்மைதான். 68 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். 1972-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட நாள் நேற்று (அக்டோபர் 10).

    அப்போது நான் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றினேன். நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பஸ்சை ஓட்டி வந்தேன். மதுரை மேலூரில் சென்றபோது ரோட்டில் பெரும் கூட்டம் நின்றது.

    விசாரித்தபோது எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. உடனே பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு இந்த ஆட்சியில் நான் ஓட்டுனராக நீடிக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு வாடகை காரில் நாகர்கோவில் விரைந்தேன்.

    அங்கு எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு எடுத்துக்கொண்டு மறுநாள் (11-ந்தேதி) காலையில் சென்னை வந்தேன்.

    ராமாவரம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்றேன். அவருடன் சத்யா ஸ்டுடியோ சென்று ஆலோசனையில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன். கட்சி தொடங்குவதற்காக கையெழுத்து போட்ட 11 பேரில் நானும் ஒருவன்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் முதல் மாவட்ட அமைப்பாளராக அவர் அறிவித்ததும் என்னைத்தான். இப்படி அன்று முதல் இன்று வரை கட்சியில் தொடர்பவன் நான். எனவே அவைத்தலைவர் பதவியை விரும்புவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×