search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்து கிடக்கும் மயில்களை வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.
    X
    இறந்து கிடக்கும் மயில்களை வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

    பல்லடம் அருகே விஷம் வைத்து கொல்லப்பட்ட 10 மயில்கள் - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

    மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பின்தான் தெரியும்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுக பாளையம்புதூர் வேலங்காடு தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 4 பெண் மயில்கள் என மொத்தம் 10 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர்கள் உமா மகேஸ்வரி, திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர்.

    பின்னர் இறந்து கிடந்த மயில்களின் உடல் பாகங்களை எடுத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவற்றின் பாகங்கள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    மயில்கள் எப்படி  இறந்தன என்று தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பின்தான் தெரியும்  என்றனர். 

    இதனிடையே வடுகபாளையம்புதூர் வேலங்காடு பகுதியில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. அந்த பயிர்களை மயில்கள் சேதப்படுத்தாமல் இருக்க விவசாயிகள் யாராவது பயிர்களில் விஷத்தை வைத்திருக்கலாம். அந்த பயிர்களை மயில்கள் தின்றதன் காரணமாக இறந்திருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வனத் துறையினர் மற்றும் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க விஷம் வைத்து மயில்களை கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. தற்போது 10 மயில்கள் இறந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
    Next Story
    ×