search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கும் காட்சி.
    X
    அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கும் காட்சி.

    திருவாரூரில் தொடர் மழையால் 25 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

    திருவாரூரில் தொடர் மழையால் 25 ஏக்கர் அறுவடைக்கு தயாரான குறுவை நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதுவரை 80 ஆயிரத்து 778 ஏக்கர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை தொடர்ந்து பெய்ததால், அறுவடை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    திருவாரூர் அருகே வைப்பூர் தென்பாதி பகுதியில் 200 ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. தற்போது பெய்து வரும் மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் 25 ஏக்கர் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து நீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்த பகுதியில் மழை நீர் வடிய வாய்ப்பு இல்லாத நிலையும் நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்ட நிலையில் குறுவை சாகுபடியில் முழு முனைப்புடன் ஈடுபட்டோம். தற்போது சூழ்நிலையில் உரம், ஈடு பொருட்கள், ஆட்கள் கூலி என அதிகமாக செலவு செய்துள்ளோம். தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.

    அறுவடை தொடங்கிய நிலையில் மழையினால் வயல்களில் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதில் ஒரு ஏக்கர் ஒரு மணி நேரத்தில் அறுவடை செய்யும் நிலையில், தற்போது தேங்கி மழைநீரில் எந்திரம் அறுக்க முடியாமல் 3 மணி நேரம் வரை ஆகிறது. இதில் மணிக்கு ரூ.2 ஆயிரத்து 500 வாடகை என்ற நிலையில் கூடுதல் செலவு செய்தும், நெற்பயிர்கள் முழுமையாக அறுக்க முடியாத நிலை நிலவுகிறது. இதில் நெல் மணிகள் சேற்றில் சிக்கி வீணாகிறது.

    மழையினால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறுவைக்கு ஏற்கனவே எந்தவித காப்பீடு செய்யப்படவில்லை. எனவே தமிழக அரசு விவசாயிகளின் பாதிப்பினை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×