search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்-கஞ்சா பொட்டலம்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்-கஞ்சா பொட்டலம்

    போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்: மது பாட்டில்கள்-கஞ்சா பறிமுதல்

    திருமங்கலம் பகுதியில் போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்கள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை வழிமறித்து போலீஸ்காரர் ஒருவர் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த வாலிபர் திருப்பரங்குன்றம் தாலுகா, கருவேலம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த முத்துக்காளை மகன் கரந்தமலை (வயது 30) என்பது தெரியவந்தது.

    இவர் திருமங்கலம்- பெருங்குடி சாலை மற்றும் பரம்புப்பட்டி பகுதிகளில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து தான் ஒரு போலீஸ் என அடையாளப்படுத்திக் கொண்டு வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளார். மேலும் பல சமூக விரோத செயல்களிலும் கரந்தமலை ஈடுபட்டு வந்துள்ளார்.

    உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனையும் செய்து வந்துள்ளார். அவரிடம் இருந்து கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் 60 மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கரந்தமலையை போலீசார் கைது செய்தனர்.

    இவர் மீது ஏற்கனவே மதுரை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×