search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் ஆட்டோவில் ஏறி தப்பி செல்லும் காட்சி.
    X
    பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் ஆட்டோவில் ஏறி தப்பி செல்லும் காட்சி.

    பச்சிளம் பெண் குழந்தையுடன் ஆட்டோவில் தப்பிச்சென்ற பெண்- டிரைவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

    தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திய பெண்ணை 2 நாட்களில் பிடித்து குழந்தையை மீட்டு விடுவோம் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 24) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 5-ந்தேதி தஞ்சை ராசாமிராசுதாரர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் ராஜலட்சுமி அனுமதிக்கபட்டிருந்த வார்டில் ஒரு பெண் தானாக முன்வந்து சகஜகமாக பழகி குழந்தையை கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று ராஜலட்சுமி குளிக்க சென்றபோது ஒரு கட்டைப்பையில் பச்சிளங் குழந்தையை வைத்து அந்த பெண் கடத்தி சென்று விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி தனது கணவருடன் சென்று தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் தலைமையில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    குழந்தையை கட்டைபையில் வைத்து கடத்தி செல்லும் பெண்


    மேலும் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது குழந்தையை கவனித்து வந்த அந்த பெண் கட்டைபையில் குழந்தையை வைத்து கடத்தி சென்றதும், மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த ஆட்டோ எண்ணை கொண்டு தஞ்சை முனியாண்டவர் காலனியை சேர்ந்த டிரைவர் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஒரு பெண் கட்டைபையுடன் வந்து தஞ்சை எலிசா நகருக்கு செல்ல வேண்டும் என கூறி ஆட்டோவில் ஏறினார். எலிசா நகரில் அப்பெண்ணை இறக்கி விட்டேன். மற்றப்படி அவர் குழந்தையை கடத்தி செல்வது எனக்கு தெரியாது என்றார்.

    இதனை அடிப்படையாக கொண்டு போலீசார் எலிசா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆட்டோ டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட அந்த பெண்னை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கபிலன், அசோகன், இன்ஸ்பெக்டர்கள் பிராங்கிளின் உட்ரோ வில்சன், ரவி மதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    குழந்தையை கடத்திய பெண்ணை 2 நாட்களில் பிடித்து குழந்தையை மீட்டு விடுவோம் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×