search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    தக்காளி விலை உயர்வு- பொதுமக்கள் தவிப்பு

    சமையலுக்கு தக்காளி முக்கிய பங்கு வகிப்பதால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மார்க்கெட்டுகளில் தக்காளியை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
    மதுரை:

    தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மதுரை மார்க்கெட்டில் தக்காளி விலை 3 மடங்கு உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி அவ்வப்போது ஏற்ற இறக்க விலையுடன் விற்கப்படுவது வழக்கம். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எப்போதுமே அதிகமாக இருக்கும். இதனால் சில நேரங்களில் கிலோ ஒரு ரூபாய் 2 ரூபாய்க்கு கூட விற்கப்படுவது உண்டு. இதனால் பறிக்காமல் செடியிலேயே போடுவதும், கால்நடைகளுக்கு தக்காளியை இரையாக கொடுப்பதும் சில நேரங்களில் நடப்பதுண்டு.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி செடிகள் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. செடிகள் அழுகியதால் விளைச்சலும் குறைந்து உள்ளது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 2 வாரங்களாக 3 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர தொடங்கியது.

    இன்று ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் 45 ரூபாய்க்கும், சில்லரை மார்க்கெட்டில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்டது. உழவர் சந்தையில் தக்காளி விலை 50 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 3 மடங்கு விலை உயர்ந்து 50 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் தவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனாலும் சமையலுக்கு தக்காளி முக்கிய பங்கு வகிப்பதால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மார்க்கெட்டுகளில் தக்காளியை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

    இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பண்டிகை காலங்கள் வரும் நிலையில் தக்காளி தட்டுப்பாடு தொடர்ந்தால் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக மதுரை மார்க்கெட்டில் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×