search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    தேர்தலில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் சோளிங்கர் ஒன்றியங்களில் காலை 9 மணி நிலவரப்படி 7.4 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    சென்னை:

    தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.

    இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

    கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர்.

    35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி, 1,324 பஞ்சாயத்து தலைவர் பதவி, 10,329 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 12,341 பதவிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடந்தது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், தியாக துருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 8 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இன்று நடந்த தேர்தலில் 2,44,724 ஆண்கள், 2,45,270 பெண்கள் என மொத்தம் 4,90,095 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களுக்கும், 12 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது.

    மொத்தம் 2,800 பதவி இடங்களுக்கு 8,955 பேர் களத்தில் உள்ளனர். நகரங்களை விட கிராமங்களில் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    விழுப்புரம் அருகே காணை யூனியனுக்குட்பட்ட சாலை அகரம் வாக்கு பதிவு மையத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.

    நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு ஆகிய 4 ஒன்றியங்களில் 783 பதவிகளுக்கும், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன் கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஒன்றியங்களில் 819 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    2 மாவட்டங்களிலும் காலை 6 மணியில் இருந்தே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வரத் தொடங்கினர். மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் வாக்குச்சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    தென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடந்தது. இதில் 5 மாவட்ட கவுன்சிலர், 50 ஒன்றிய கவுன்சிலர், 87 பஞ்சாயத்து தலைவர், 697 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஆயிரத்து 812 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதுதவிர, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 80 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 469 வாக்குச்சாவடிகளில் இன்று பொதுமக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

    வேலூர், அணைக்கட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் முதன்முறையாக இளம் வாக்காளர்கள் அதிக அளவில் ஓட்டு போட்டனர்.

    வேலூர் அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து தற்காலிக விளக்கு அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக டார்ச்லைட் செல்போன் வெளிச்சத்திலேயே வாக்காளர்கள் சிரமப்பட்டு ஓட்டு போட்டனர்.

    உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பெண்கள்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் நடந்தது. 4 மாவட்ட கவுன்சிலர், 70 ஒன்றிய கவுன்சிலர், 70 பஞ்சாயத்து தலைவர், 514 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளை தேர்வு செய்ய மக்கள் ஓட்டு போட்டனர்.

    கிராம மக்கள் ஆர்வமுடன் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஆலங்காயம் பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 757 வாக்குசாவடி மையங்களில் இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 3 மாவட்டங்களிலும் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்து வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 11,527 ஆண்கள், 9,189 பெண்கள், ஓட்டு போட்டு இருந்தனர். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் 8.5 சதவீத வாக்குகள் 2 மணி நேரத்தில் பதிவாகி இருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களில் காலை 9 மணி நிலவரப்படி 5.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் சோளிங்கர் ஒன்றியங்களில் காலை 9 மணி நிலவரப்படி 7.4 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 19 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் 12 பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 13 பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. 28 பதவிகளில் 15 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 13 பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    9 மாவட்டங்களிலும் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இதன்படி இன்று நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. 7,130 போலீசார், 3,405 ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    வாக்குச்சாவடிகள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    9 மாவட்டங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவை கண்காணித்தனர்.

    இவர்களை தவிர ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் தனித்தனியாக வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு வீடியோ எடுக்கப்பட்டது. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக 9 மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர்.

    இன்று மாலை 6 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் ஓட்டு போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு வாக்குச்சீட்டுகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட உள்ளது. இந்த மையங்களில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

    Next Story
    ×