search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையை கட்டைப் பையில் கடத்தி செல்லும் பெண்ணின் வீடியோ மருத்துவமனை வளாக கேமிராவில் பதிவாகி இருந்த காட்சி.
    X
    குழந்தையை கட்டைப் பையில் கடத்தி செல்லும் பெண்ணின் வீடியோ மருத்துவமனை வளாக கேமிராவில் பதிவாகி இருந்த காட்சி.

    பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கட்டைப்பையில் வைத்து கடத்தல்

    தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது24 ) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்கள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடியில் உள்ள வார்டில் ஒரு பெண் அவரிடம் ‘என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்’ எனக் கூறி உதவி செய்வது போல் நடித்துள்ளார். கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து அவருடனே இருந்தார். இதனால் அந்த பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.

    இன்று காலை அந்த பெண் ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறினார். இதனை நம்பிய ராஜலட்சுமியும் குளிக்க சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ஒரு கட்டைபையில் வைத்து கடத்தி கொண்டு வேகமாக சென்றுள்ளார். இதற்கிடையே குளித்து விட்டு வார்டுக்கு வந்த ராஜலட்சுமி குழந்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறியடித்து கொண்டு பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக தனது கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

    குழந்தையை பறிகொடுத்த தாய் ராஜலட்சுமி கதறி அழும் காட்சி. அருகில் கணவர் குணசேகரன்.


    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் குழந்தையின் நிலை தெரியவில்லை. அப்போது தான் ராஜலட்சுமிக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து அவர் கணவரிடம் கூறினார். மேலும் இது தொடர்பாக மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் ஆய்வு செய்தபோது ராஜலட்சுமிக்கு உதவியாக இருந்த பெண் கட்டைபையில் குழந்தையை தூக்கி கொண்டு கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்த பெண் பற்றிய அடையாளங்களை கூறி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×