search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரெயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்- அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம்

    நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகளும், மத்திய அரசும் அறிவித்து வருகின்றன.
    சென்னை:

    உலக நாடுகளை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது.

    இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்தது. பன்னாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ரெயில் போக்குவரத்தும் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ரெயில் போக்குவரத்து பகுதி, பகுதியாக தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து மின்சார ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது. ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் இதுவரை வினியோகிக்கப்படவில்லை.

    அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

    ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே வாரியம் எடுத்தது. ரெயில் நிலைய வளாகம் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

    ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.

    மேலும் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பார டிக்கெட்டுகளின் விலையை அதிரடியாக உயர்த்தியது. 5 ரூபாயாக இருந்த பிளாட் பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகளும், மத்திய அரசும் அறிவித்து வருகின்றன.

    பன்னாட்டு விமான சேவையும் விரைவில் தொடங்கப்படவுள்ளன. கடந்த ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில் (பேசஞ்சர்ஸ்) கடந்த வாரம் முதல் இயக்குவதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

    முன்பதிவு இல்லாமல் இந்த ரெயில்களில் தற்போது பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ரெயில்வே துறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும், ரெயில்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மேலும் 6 மாதங்களுக்கு ரெயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அனைத்து பொது மேலாளர்களுக்கும் வாரியத்தின் செயல் இயக்குனர் நீரஜ் சர்மா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரெயில்வே வளாகம், ரெயில் பயணங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணியாதவர்களுக்கு இந்திய ரெயில்வே விதிமுறைகளின் படி ரூ.500 அபராதம் விதிக்கவும், கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவு முடிவுக்கு வரவுள்ள நிலையில் ரெயில்வே வாரியம் இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்தது. கொரோனா நோய் தொற்று பரவல் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் இந்த உத்தரவு மேலும் வருகின்ற 2022 ஏப்ரல் மாதம் 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ரெயில், ரெயில்வே வளாகத்தில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×