search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைமறியல்
    X
    சாலைமறியல்

    வாலிபரை தடியால் தாக்கியதில் மண்டை உடைந்தது - போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

    வாக்களிக்க நேரம் கேட்டபோது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தடியால் தாக்கப்பட்ட வாலிபர் மண்டை உடைந்தது. போலீசாைர கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியிலுள்ள அசோக் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 5 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று அங்கு காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வாலிபர்கள் சிலர் வாக்களிக்க வந்தனர். அப்போது நேரம் முடிந்துவிட்டது என போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வாலிபர்கள் தாங்கள் சென்னையிலிருந்து வந்ததாகவும், எனவே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்கவே வாக்குவாதம் நடந்துள்ளது.

    அப்போது தடியால் தாக்கியதில் வாலிபருக்கு மண்டை உடைந்தது. உடனே வாலிபர் பயந்து ஓடவே அங்கிருந்த போலீசாரை பொதுமக்கள் கண்டித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் நகர்ப்பகுதியில் திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் வாக்காளர்கள் வாக்களிக்க காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியுள்ளது என பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படவே அவர்கள் திரும்பி சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல புத்தகரம் பகுதியிலும் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×