search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    அறநிலையத்துறை புதிய சட்டத்திருத்தத்தை அரசு திரும்பப்பெற வேண்டும் - அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

    அறநிலையத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தப்படி அரசாணை 318க்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க அரசு உடனே சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
    பல்லடம்:

    பல்லடத்தில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அமைப்புக் குழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் பழனிச்சாமி,பஞ்சலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 

    கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை,எளிய மக்கள் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருந்தும், விவசாய நிலங்களில் சாகுபடி செய்தும் வருகின்றனர். இவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறநிலையத் துறை சட்டப்பிரிவு பிரிவை மாற்றி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த சட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்டால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து ஜாமீனில் வெளியில் வரமுடியாது என்றும், துறை அதிகாரிகள் தவிர்த்து யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்றும் உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் கோவில் இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும். 

    எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி  வருகிற 20 - ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமும், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும், அறநிலையத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தப்படி அரசாணை 318க்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க அரசு உடனே  சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் கோவில் இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா கொடுப்பது குறித்து சட்டமன்றத்தில் பேசுவது ஒன்று, வெளியில் பேசுவது ஒன்றாக உள்ளது. 

    எனவே அரசாணை 318 யை செயல்படுத்துவது, ஏழைகளுக்கு பட்டா வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழ்நாடு முதல் - அமைச்சர் தெளிவுப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

    கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் காஜா மைதீன், விவசாய அணி காந்தி மற்றும் கருணாநிதி, ஆசாத், அஷ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×