search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    நெல்லை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பகுதியில் நேற்று சாரல் தூறியபோது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று நெல்லை மாவட்டம் சேர்வலாறு, பாபநாசம் அணைப் பகுதியில் சாரல் மழை பெய்தது. நெல்லையிலும் ஒரு சில இடங்களில் சாரல் அடித்தது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, கடனாநதி, அடவி நயினார், கருப்பாநதி அணை பகுதியில் லேசான மழை பெய்தது. கடனா நதியில் 5 மில்லி மீட்டர் அளவுக்கும், அடவிநயினார் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் அளவிற்கும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் மட்டும் 6 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசாக சாரல் தூறியது.

    நேற்று நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பகுதியில் சாரல் தூறியபோது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியது. அப்போது சுத்தமல்லி சத்யா நகரைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 58) என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் மீது இடி- மின்னல் தாக்கியது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழை பெய்ததால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணை உள்பட அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 88. 90 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 102.59 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.20 அடியாகவும் உயர்ந்துள்ளது.
    Next Story
    ×