search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஜு கட்லி
    X
    காஜு கட்லி

    தீபாவளிக்கு 18 டன் இனிப்பு விற்பனை செய்ய ஆவின் இலக்கு

    அனைத்து மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளதால், சிறப்பு வகை இனிப்புகளின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக ஆவின் உயர் அதிகாரி கூறினார்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படுவது வழக்கம். ஆவின் நெய், வெண்ணெய், மற்றும் இனிப்பு வகைகள் பெரும்பாலும் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

    கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குறைவான அளவே இனிப்புகள் தயாரிக்கப்பட்டது. நெய் 200 டன் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தொற்று கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் இனிப்பு வகைகளை அதிக அளவு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி
    பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. காஜு கட்லி, காஜு பர்பி, ட்ரை புரூட்ஸ் சுவீட்ஸ் உள்ளிட்ட 5 ஸ்பெ‌ஷல் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது.

    15 டன் முதல் 18 டன் வரை இனிப்புகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பால் கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ஆவின் நெய்

    300 டன் நெய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வகை சிறப்பு இனிப்புகள் அரை கிலோ பாக்கெட்டுகளிலும், மைசூர் பாகு, ரசகுல்லா, பால்கோவா போன்ற இனிப்புகள் 250 கிராம் அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    அனைத்து மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளதால், சிறப்பு வகை இனிப்புகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விலை நிர்ணயம் செய்யப்படும்.

    பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தீபாவளி இனிப்புகளுக்கு முன்பதிவு செய்யலாம். மாதவரம், அம்பத்தூர், சோளிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தனித்தனி தொடர்பு எண்கள் வழங்கப்பட உள்ளது.

    அந்த எண்களில் தொடர்புகொண்டு தீபாவளி இனிப்பு மற்றும் பால் பொருட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஆவின் இனிப்புகளை பார்லர்கள் மட்டுமின்றி வணிக வளாகங்களில் விற்கவும் ஆலோசிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×